தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும்,முதலாளிமார் சம்மேளனத்திற்கும், அரசாங்கத்திற்கும் மலையகத்தில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தற்போதைய வருமானத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் 4 வருடங்களுக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை முன்வைத்தார். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பொது அமைப்புகளும் மலையக இளைஞர்களும் பேராதரவை வழங்கினர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பங்குதாரராக இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்த போதும் சம்பள உயர்வு கோரிக்கை வெற்றி பெறவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தான் தேர்தலில் வெற்றி ஈட்டியதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற மன்ற தேர்தல் காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு இரங்கல் உரையாற்றும் போது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க வேண்டுமென கூறினார். நான் பிரதமரானதும் நிச்சயமாக சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களுக்கு 1500ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என தலவாக்கலை தேர்தல் பிரசார கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார். இதற்கு மேலதிகமாக இ.தொ.கா. பொதுச்செயலாளரும், இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சு பதவியை பொறுப்பேற்றதும் உடனடியாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து தந்தையின் கனவை நனவாக்குவேன் என்றார்.
இவை அனைத்தும் நடந்து பல மாதங்கள் கடந்துள்ள போதும் சம்பள உயர்வு வழங்கப்படாமல் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விரக்தி அடைந்துள்ளனர். எனவே சம்பள உயர்வை பெற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அழுத்தம் பிரயோகிக்க முன்வர வேண்டும் என்றார்.