பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை நவீனும், இதொகாவினருமே தடுத்து நிறுத்தினர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டிக்கோயாவில் இன்று (25) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் திகாம்பரம் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித்தேர்தலின்போது மலையக மக்களுள் பெருமளவானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர் அனைத்து மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கினார் என்று ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
ஜனாதிபதி என்பவர் பொதுவானவர். வாக்களித்த மக்களுக்காக மட்டுமின்றி நாட்டு மக்களுக்காகவே அவர் பணியாற்றவேண்டும். இதுகூட புரியாமல் அரசியலில் அனுபவம் இல்லாதவராக ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிட்டுவருகின்றார்.
5000 ரூபாவை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கவில்லை. அது மக்களின் வரிப்பணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
அதேவேளை, நான் அமைச்சராக இருந்தபோது பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். எனினும், நவீன் திஸாநாயக்கவும், இ.தொ.காவினருமே அதனை தடுத்துநிறுத்தினர். இவ்வாறு செய்துவிட்டு இன்று எம்மை குறைகூறுகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்