ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள், 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை.
ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன. பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசும் அறிவித்துள்ளது.










