ஹேலீஸ் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட ஈஸ்ட் பிரிவில் அத்தோட்ட மக்களுக்கு வரும் கடிதங்கள் 6 மாதங்களுக்கு மேலாக விநியோகிக்கப்படாமல் பெரட்டுக்களத்திலேயே தேங்கி காணப்படுவதாக அத்தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது
தலவாக்கலை பிரதான தபாற் காரியாலத்திற்கு வரும் கடிதங்கள் ஹொலிரூட் தோட்ட காரியாலத்திற்கு தலவாக்கலை பிரதான தபாற் காரியாலத்தினூடாக அனுப்பப்பட்டு அங்கிருந்து தோட்ட பிரிவுகளான ஹொலிரூட் ஈஸ்ட், ஹொலிரூட் மேல்பிரிவு,ஹொலிரூட் கீழ்பிரிவு, ஹொலிரூட் ரத் மற்றும் ஹொலிரூட் 18 ஆகிய பிரிவுகளுக்கு தோட்ட காரியாலயத்தினூடாக பிரித்து
பெரட்டுகளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதனை தோட்ட உத்தியோகத்தர்கள் உரிய தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹொலிரூட் தோட்டத்திற்கு வரும் பதிவுத் தபால்கள் மாத்திரம் தலவாக்கலை பிரதான தபாற் காரியாலத்திலிருந்து விநியோகிக்கப்படுவதாகவும் ஏனைய கடிதங்கள் அனைத்தும் தோட்ட காரியாலத்திற்கே அனுப்பப்படுவதாகவும் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதற்காக அனுப்பப்பட்ட கடிதங்கள்,அடகு வைத்த நகைகளுக்கு வங்கிகளுடாக அனுப்பப்பட்ட கடிதங்கள், தொழில் வாய்ப்புகளை பெற விண்ணப்பித்த இளைஞர் யுவதிகளுக்கு அனுப்பப்பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான கடிதங்கள், கடன் சம்பந்தமாக வங்கிகளுடாக அனுப்பப்பட்ட கடிதங்கள்,தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமநிதி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியூடாக அனுப்பப்பட்ட கடிதங்கள் இன்னும் பல கடிதங்கள் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் அத்தோட்ட பெரட்டுக் களத்திலேயே தேங்கி கிடக்கின்றன.
இதனால் இத்தோட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்
