பொதுத் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் சுகாதார ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக 8 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகாரிகள் தங்களுக்குரிய பணி இடங்களுக்கு இன்று முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார அத்தியட்சகர்கள், நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், குடும்பநல சுகாதார அதிகாரிகள், நிறைவுகான் வைத்தியர்கள் அடங்கலாக சுகாதார குழுவினர் தேர்தல் காலத்தில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தலா ஒருவர் அல்லது இருவர் வீதம் சுகாதார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 69 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையமொன்றில் இரு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சில பகுதிகளுக்கு இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.