இலங்கை, மாலைதீவுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) ஆகியோர் முன்னிலையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாலைதீவு – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுகாதாரம், விளையாட்டு, சுற்றுலா, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதன்படி,

01. இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரினால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

02. இலங்கை தேசிய ஆவணக்காப்பகத் திணைக்களத்திற்கும் மாலைதீவு தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் இடையில் ஆவணக்காப்பக ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரினால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

03. மாலைதீவு குடியரசின் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கும், இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் இடையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam) மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

04. மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இர்திஷாம் ஆதம் (Iruthisham Adam) மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோரால் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

05. பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்காக, மாலைதீவு குடியரசின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொந்தா ஆகியோருக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

06. மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவை அமைச்சுக்கும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவுக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

07. இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும், மாலைதீவு குடியரசின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்க ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr Mohamed Muizzu) இந்நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சுகளின் அதிகாரிகள் உள்ளிட்ட மாலைதீவு தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles