20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தை முக்கிய ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது.
அங்கு ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. போரில் பயன்படுத்திய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் சில பழுதாகி இருந்தன. அவற்றையும் அங்கேயே நிறுத்தி வைத்து இருந்தார்கள். அதேபோல தரைப்படைக்கு பயன்படுத்தும் ஏராளமான கவச வாகனங்களும் பழுதாகி நிறுத்தப்பட்டு இருந்தன.
இப்போது அமெரிக்க படை அவசரமாக வெளியேறும் நிலையில் பழுதான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் மற்றும் பல தளவாடங்கள் ஆகியவற்றை திரும்ப எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்படியே விட்டு சென்றாலும் அவற்றை தலிபான்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. எனவே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ராணுவ வாகனங்களை அழித்துவிட்டு வெளியேறினார்கள். இனி ஒருபோதும் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டன.
இவ்வாறு கடந்த 2 வாரத்தில் 73 விமானங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கன்சி கூறினார்.
எங்கள் ராணுவம் விட்டு சென்ற எந்த ஒரு பொருளையும் தலிபான்கள் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் முற்றிலும் செயலிழக்க செய்து அழித்து இருக்கிறோம். இனி அவற்றால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது என்று கூறினார்.
சில ஹெலிகாப்டர்களும் அழிக்கப்பட்டுள்ளன. இத்துடன் 70 கவச வாகனங்களையும் அழித்தார்கள். இதில் ஒவ்வொரு வாகனமும் ரூ.7 கோடி மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.