ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அது உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்டா வகை கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகக் காணப்படும் இடங்களில் ஒமிக்ரோன் வகை தொற்றும் அதிக அளவில் பரவி வருகிறது. டெல்டா வகையைவிட சமூகப் பரவல் இடங்களில் இது 1.5 நாள் முதல் 3 நாட்களில் வேகமாக இரட்டிப்பாகி வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் இந்த வைரஸ் திரிபு முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட விரைவில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அதனை அவதானத்திற்குரியது என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. இந்த திரிபின் வீரியம் உட்பட பண்புகள் பற்றி இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை
எனினும் நோய்த் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சில இடங்களில் மருத்துவமனைகள் நிரம்பி சுகாதார கட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.