டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற குழு இரண்டுக்கான மூன்று போட்டிகளும் அந்த குழுவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் இரு அணிகளை தீர்மானிக்கும் ஆட்டங்களாக மாறின.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்றதால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் அப்போது அந்தக் குழுவில் ஆறு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்தியா உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து தலா 4 புள்ளிகளுடன் இருந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அரையிறுதிக்கான மற்ற அணியை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டி அரையிறுதியை உறுதி செய்தது. தொடர்ந்து சிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய அணி பாகிஸ்தானை பின்தள்ளி குழு இரண்டில் முதலிடத்தை பிடித்தது.
ஏற்கனவே குழு ஒன்றில் இருந்து நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.
இதன்படி வரும் புதன்கிழமை (9) நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி சிட்னியில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகும்.
தொடர்ந்து வியாழக்கிழமை (10) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும். இந்தப் போட்டி அடிலெயிட்டில் பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகும். டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரும் நவம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ளது.










