“ ஆசிரியர் உதவியாளர்களின் நிரந்தர நியமன விடயத்தில் தனது முன்னைய பாவங்களை கழுவிக்கொள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முற்படுகின்றாரா?” – என்று இதொகாவின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ 2015 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் முயற்சியினாலே ஆசிரியர் உதவியாளர் நியமனத்துக்கு அடித்தளம் இடப்பட்டது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 2015 – 16ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் காலப்பகுதியில் கல்வி ராஜாங்க அமைச்சராக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனை செயற்பட்டார்.
அந்த ஐந்தாண்டு பகுதியில் ஆசிரிய உதவியாளர் ஒருவருக்கு கூட நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை. நல்லாட்சி காலப்பகுதியில் கல்வி ராஜாங்க அமைச்சராக ஒரு தமிழர் அதுவும் மலையகத் தமிழராக பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் செயற்பட்டபோதும் இந்த நியமனம் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாரிய முயற்சியின் காரணமாக ஆசிரியர் உதவியாளர்களுக்கு கட்டம் கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட சுமார் 3,100 நியமனங்களில் இறுதியாக 140 நியமனங்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டியிருந்தது.
எஞ்சி இருந்த140 நியமனங்களை வழங்குவதற்கு நாம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கின்ற நிலையில் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டதனால் இந்த நியமனம் வழங்கப்படுகிறது என்ற மாயையை முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளிக்காட்ட முற்படுகிறார். அவ்வாறு சாதாரணமாக இந்த நியமனம் வழங்கப்பட முடியுமாக இருந்தால் ஏன் ராதாகிருஷ்ணன் கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்தபோது வழங்கப்படவில்லை?
கேள்வி கேட்டதனால் கிடைக்கும் என்றால் ஆசிரியர் உதவியாளர்களுக்கு கோடிக்கணக்கான சம்பளம் நிலுவையாக உள்ளது அதையும் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு ஓரிரு தினங்களில் வாங்கிக் கொடுக்கலாமே? நல்லாட்சி காலத்தில் நான்கு ஆண்டுகள் ஆசிரிய உதவியாளர்களை 6000 ரூபாய் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருந்தது யார்?
இறுதியாக வழங்கப்பட வேண்டி இருந்த 140 நியமனங்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சர் செயலாளரின் ஏனோ தானோ என்ற போக்கே காரணமாகும். ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் மட்டுமல்ல மத்திய மாகாண தமிழ் கல்வியை சீர்குலைப்பதில் மத்திய மாகாண நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலைமையை தொடரவிட்டால் இதன் விளைவுகளை இன்னும் சொற்ப காலத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி துறை வீழ்ச்சி அடைவதை கண்கூடாக காண முடியும்.
140 ஆசிரியர் உதவியாளர் நிரந்தர நியமன விடையத்தில் செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் நல்லாட்சி கால ஐந்து வருடங்களில் அதுவும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கல்வி ராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் ஒருவருக்கு கூட ஏன் நியமனம் வழங்கப்படவில்லை என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதற்குப்பின் 3000 உதவி ஆசிரியர்களுக்கு நியமனத்தை பெற்றுக் கொடுக்க செயற்பட்டவர்களை இனம் கண்டு அதையும் செய்திகளாக வெளியிட வேண்டும்.
அப்போதுதான் பழைய பாவங்களை கழுவி கொள்வதற்காக புதிதாக உருவெடுத்துள்ளவர்களின் வேஷம் வெளிப்படும்.” எனவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
