ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே நாளில்? சஜித் அணி யோசனை!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது பொருத்தமாக அமையும் என மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போது வேறுவழியில்லை. ஆகவேதான் இணைந்து பயணித்தாவது ஓரிரு ஆசனங்களைப் பெறுவதற்கு முற்படுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பவற்றை ஒரே நாளில் நடத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடியுள்ளேன். இவ்விரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தமுடியும். நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தேர்தலை நடத்தினால் நிதியையும் சேமிக்க முடியும்.

ஆகவே எந்த தேர்தல் முதலில் என பேசிக்கொண்டிருப்பதைவிட இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது நல்லது. “ – என்றார்.

Related Articles

Latest Articles