வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் கைதுகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அதிகம் இங்கு பேசப்பட்டது. விவாதம் ஆரம்பமான நாளன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலில் வழிபட சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறியே போராட்டம் நடத்தப்பட்டது. கோவிலில் வழிபாட்டுக்கு சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டது தவறு என எதிரணியினர் கூறினர். அங்கு எந்தவொரு கோவிலும் இல்லை. தொல்லியல் திணைக்களத்துக்கு உரித்தான இடமொன்றே அங்குள்ளது. அநுராதபுரத்துக்குரிய பௌத்த விகாரையொன்றின் அடையாளங்கள் எனக் கருதப்படும் தொல்லியல் எச்சங்கள் இருந்துள்ளன என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“ பௌத்த விகாரைக்குரிய அடையாளங்கள் உள்ள இடம் என தொல்லியல் திணைக்களளே கூறுகின்றது. இந்நிலையில் வேறு சிலர் அங்கு சென்று இது தமது வழிபாட்டு தளம் எனக் கூற முற்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டிலேயே சிவலிங்கம் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து பிக்குகள் பஸ்களில் சென்று தமது எதிர்ப்பை வெளியிட முற்பட்டனர். கடும் முயற்சிக்கு மத்தியில் ஏற்படவிருந்த பிரச்சினையை தடுத்து நிறுத்தினோம்.” எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“ மார்ச் 8 ஆம் திகதி 400 பேர்வரை அங்கு வந்து பூஜை நடத்தினர். 6 மணிக்கு பின்னர் 40 பேர்வரை அங்கு இருந்தனர். அந்த 40 பேரும் இரவு 8 மணியளவில் அடுப்புமூட்டி சமைக்க முற்பட்டுள்ளனர். மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் எடுக்க முயற்சித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது அங்கிருந்த தொல்லியல் அதிகாரிகள், வனபாதுகாப்பு அதிகாரிகள் என சகலரும், அதனை நிறுத்துமாறு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து 8 அல்லது 9 பேரை கைது செய்ய நேரிட்டது. கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2ஆவது தடவையும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தால் பௌத்த வழிபாட்டுதலம் எனக் கூறப்படும் பகுதிக்கு சென்று, பிரச்சினை விளைவித்து, சட்டத்தைமீறியுள்ளனர் என்பது இதன்மூலம் புலனாகின்றது. வடக்கு, கிழக்கில் இப்பிரச்சினை தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நிச்சயம் கைது செய்வோம. பௌத்த இடமாக இருந்தாலும் இந்து இடமாக இருந்தாலும் அத்துமீறல்கள் இடம்பெற்றால் சட்டம் செயற்படும்.
சட்டம் அனைவருக்கும் சமம். கோவிலில் வழிபட சென்றவர்களே கைது செய்யப்பட்டனர் என எதிரணி கூறியது. அங்கு கோவிலே இல்லை. எனவே, போலியான தகவல்களை முன்வைக்க வேண்டாம். வடக்கு வாக்குகளை இலக்குவைத்து போலி தகவல்களை விதைக்க வேண்டாம் என எதிரணியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
