பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பசுத்தோல் போர்த்திய புலி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ வேலுக்குமார் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் அரசியல் செய்துள்ளேன். ஊடகங்களில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட வேலு குமார் எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. ஆனால், நான் அறிக்கை கொடுக்கவில்லை,அவர் அறிக்கை கொடுக்கவில்லை என கூற, வேலுகுமார் ஒன்னும் புலனாய்வு அதிகாரி அல்ல. உங்களை பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பியது வாயில் வடை சுடுவதற்கா? அல்லது மக்களுக்கு பணி செய்வதற்கா?
நான் வெளியிட்ட அறிக்கையை, நான் வெளியிடவில்லை வேறு ஒருவர் தான் என்னுடைய பெயரில் அறிக்கை விடுகிறார் என கூறும் நீங்கள் என்னை கௌரவமானவன், நியாயமானவன் எனக் கூறிவிட்டு இவ்வாறான குற்றச்சாட்டை கூறி கௌரவத்தை இழக்கும் வகையில் செயற்படுகிறீர்கள். அதனால் தான் பசுத்தோல் போர்த்திய நரி என்பதற்கு நீங்கள் தான் சிறந்த உதாரணம் என நான் தெரிவித்தேன்.
மீண்டும் ஒரு தடவை ஆணித்தனமாக அடித்து கூறுகிறேன், வேலுகுமார் 10 பைசா கூட தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காமல் சந்தா பணத்தை வெட்கம் இல்லாமல் பெற்று கட்சியை நடத்துபவர்கள் தான் ஜனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் என்பதை அழுத்தமாக தெரிவிக்கிறேன்.
நான் தான் அறிக்கை கொடுத்திருக்கிறேன் என முன்னணி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் நான் அந்த அறிக்கையை கொடுக்கவில்லை என வேலுகுமார் குழம்புவது அவர் குழப்பத்தில் உள்ளதை வெளிப்படுத்துகின்றது.
இ.தொ.கா மூத்த தலைவர்களுக்கு கௌரவமளிப்பதில்லை என பகுத்தறிவற்ற வேலுகுமார் கூறியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனக்கு போசகர் என்ற உயரிய பதவியை கொடுத்து என்னை கௌரவப்படுத்தியுள்ளது. பொதுவாக கௌரவத்தையும் தன்மானத்தையும் பற்றி வேலுகுமார் பேசும் போது எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது .” எனவும் தெரிவித்துள்ளார்.










