கைதான வீதியோரக் கடைக்காரர் பிணையில் விடுவிப்பு!

உணவின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை விரட்டிய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (17) வாழைத்தோட்டம் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

இதன்போது, சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கம் மற்றும் ரூ. 10 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, புதுக்கடை பிரதேசத்தில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர் சாப்பாட்டின் விலையை கேட்ட பின் அது அதிகம் எனும் தோரணையில் செயற்பட்டதைத் தொடர்ந்து, உணவை வாங்கவில்லையாயின் அங்கிருந்து வெளியேறுமாறு, கடையின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் குறித்த ஒருவர், குறித்த வெளிநாட்டவரை பயமுறுத்தும் வகையில் மிரட்டியதாக தெரிவித்தமை தொடர்பில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் மீனுடன் கொத்து ரொட்டி ஒன்றின் விலையை கேட்டபோது, அதற்கு ரூ. ​​1,900 என தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை குறித்த வெளிநாட்டவர் வாங்க மறுத்த நிலையில், உணவை வாங்கவில்லையாயின் அங்கிருந்து வெளியேறுமாறு கடை உரிமையாளர் அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு 12 பகுதியை வசிப்பிடமாக கொண்ட 51 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Articles

Latest Articles