“மலையக மக்களை முழுமையாக மறந்த வரவு – செலவுத் திட்டமே 2021 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆயிரம் ரூபா முன்மொழிவுகூட ஏமாற்று வித்தையாகும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 இல் பிறப்பித்திருந்தார். இதனையடுத்து சேருடன் விளையாடமுடியாது, கம்பனிகள் கட்டாயம் சம்பள உயர்வை கொடுத்தாக வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மார்தட்டினர். அவ்வாறு இல்லையேல் காதை பிடித்து கம்பனிகளை வெளியேற்றுவார் எனவும் சூளுரைத்தனர்.
ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு ஆகின்றது. இன்னும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. இதனால்தான் ஆயிரம் ரூபா விடயத்திலும் ‘கோட்டா சேர் பெயில்’ என நாம் சொல்கின்றோம்.
ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு பட்ஜட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அந்த கொடுப்பனவை வழங்கமுடியாது என பெருந்தோட்டக்கம்பனிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது மலையக மக்களை முழுமையாக மறந்தே தயாரிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே பிரச்சினை, வேறு எதுவும் இல்லை எனக்குறிப்பிட்டு ஆயிரம் ரூபாவுக்குள் ஒரு சமூகத்தை மட்டுப்படுத்தும் சதியும் இந்த முன்மொழிவின் பின்னணியில் உள்ளது.” – என்றார்.










