ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தால் இஸ்ரேலுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஈரான் போர் நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி இலங்கை போன்ற சிறியதொரு நாட்டுக்கு வருவாரா என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அணிசேராக் கொள்கையை பின்பற்றும் இலங்கை மற்றும் தற்போதைய ஜனாதிபதிக்கு மதிப்பளித்து அவர் இங்கு வந்தார். இது எமது நாட்டுக்கு கிடைத்த கௌரவமாகும்.
ஈரான் ஜனாதிபதி இலங்கை வருவதால் இஸ்ரேல் எம்மை பகைத்துக்கொள்ளும் என சிலர் கருதினர்.
ஆனால் இஸ்ரேல் ஜனாதிபதி நாடு திரும்புவதற்கு தயாரான வேலை, இஸ்ரேல் விமானமொன்றும் வந்தது. இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் ஊழியர்களை ஏற்றிச்செல்லவே அந்த விமானம் வந்தது. இதன்மூலம் இஸ்ரேலுடன் பிரச்சினை இல்லை என்பதும் புலனானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. அதேபோல பாலஸ்தீன மக்களுக்கும் நேசக்கரம் நீட்டிவருகின்றோம். இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஈரானுடன் இலங்கைக்கு சுமூக உறவு இருக்கின்றது.” – என்றார்.










