“தொழிலாளர் தேசிய சங்கத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எமக்கு உத்வேகத்தை தந்துள்ளது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 59வது மேதினம் தலவாக்கலையில் இடம்பெற்றது. இந்த மேதின கூட்டத்தில் எமது அழைப்பினை ஏற்று வருகைத்தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்கவுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது மேதின கூட்டத்தில் பெரும்திரளான மக்கள் நுவரெலியா மாவட்டத்திலிருந்து உணர்வுப்பூர்வமாக வருகை தந்திருந்தனர்.
இந்த மேதினத்தில் ஏனைய மாவட்டங்களுக்கு நாம் போக்குவரத்து வசதிகளை வழங்கியிருந்தால் தலவாக்கலையில் இன்னும் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் போயிருக்கும்.
இந்த மக்களின் பங்கேற்பு என்னுடைய 20 வருட கால அரசியல் மீதும் கடந்த 4 வருட அமைச்சராக இருந்தபோது முன்னெடுத்த மக்கள் அபிவிருத்தி திட்டங்களின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை எடுத்து காட்டுவதாகவே பார்க்கின்றோம்.
இந்த ஒத்துழைப்பு இன்னும் எம்மை வேகமாகவும் விவேகமாகவும் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்க உத்வேகத்தை தந்துள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி போன்ற மலையக மக்கள் வாழும் மாவட்டங்களிலிருந்து இந்த மேதினத்திற்கு பங்குகொள்ள முடியாவிட்டாலும் எம்முடைய சேவைகள் எல்லா மலையக மக்களை முன்னிலைப்படுத்துவதாகவே அமையும்.
எனவே மீண்டுமொரு முறை நுவரெலியா மாவட்டத்திலிருந்து அணிதிரண்ட பெரும்திரளான மக்களுக்கும் ஏனைய மாவட்டத்திலிருந்து வருகைத்தர ஆர்வம் காட்டிய அனைத்து தொழிலாளர் தேசிய சங்க உறவுகளுக்கும் நன்றிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
