பிரேசிலில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஐந்து மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியதுள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், இணையம், தொலைதொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 1 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.

சுமார் இரண்டு லட்சம் பேர் அவர்களது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாகாணம் முழுவதும் 15 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 904 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles