மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ப்றையன் லாரா இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடக்கூடிய நான்கு அணிகளை கணித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து உலகக்கிண்ணத்தை கூட்டாக நடத்துகின்றன. இருபதுக்கு 20 உலகக்கிண்ண 9 வது அத்தியாயம் இதுவாகும். இம்முறை 20 அணிகள் பங்கேற்கின்றன.
மேற்கிந்திய தீவுகள், இந்தியா, நடப்புச் சம்பயின் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என கூறியுள்ள லாரா, இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளும், இந்தியாவும் மோதுவதை தான் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், சிறந்த அணி எதுவோ அது உலகக்கிண்ணத்தை வெல்லட்டும் என்று கூறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றது. இந்தியா 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக்கிண்ணத்தை வென்றெடுத்தது.
மேற்கிந்திய தீவுகளும், இங்கிலாந்தும் தலா இரண்டு முறையும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.
( பேனா )