நுவரெலியா, சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு மலையக இந்து குருமாருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நுவரெலியா, சீதையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலருக்கும் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் போற்றுகின்றோம். சீதையம்மனின் அருள் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
எனினும், மலையகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு மலையகத்தில் உள்ள குருமாருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக இந்து குருமாரை முற்று முழுதாக புறக்கணித்து செய்யப்பட்டுள்ள கும்பாபிஷேகமாகவே இதனை கருதுகின்றோம்.
வாக்கு மற்றும் ஏனைய விடயங்களுக்காக மலையக இந்து குருமாரை நாடுபவர்கள், இவ்வாறான நிகழ்வுகளின்போது புறக்கணிக்கின்றனர். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுக்கு கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.” – என்றார்.










