இருபது கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான குறித்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது பயணப் பையினுள் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா அடங்கிய 3 பொதிகளுடன், 2 கிலோகிராமுக்கும் அதிக கொக்கெய்ன் அடங்கிய 3 பொதிகளை மறைத்து கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக அவருக்கு 1,000 டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
