” தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி அதிகரிப்பு காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு, அவசர கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. ” – என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சித்தியடைந்தவர்கள் எனவும், அதற்கு குறைவாக பெற்றவர்கள் சித்தியடையாதவர்கள் எனவும் வகைப்படுத்தப்படுவதால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இது அம்மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் பல மாவட்டங்களில் கூடிய வெட்டுப் புள்ளியாக 169 ஐ உயர் மதிப்பெண்ணாகக் குறிப்பிட்டதன் காரணமாக வினாத்தாளில் 84% புள்ளிகள் பெற்ற பிள்ளைகளும் புலமைப் பரீட்சையில் தேர்ச்சி பெறாதவர் என்ற நிலையில் பார்க்கப்படுவது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இவ்வாறான மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். நாட்டின் கல்வித்துறையில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தான்னிச்சையான முடிவுகளால் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு உட்படுத்துவதனை நாம் தெரியப்படுத்துகிறோம்.
இங்கே பிள்ளைகளை மன உளைச்சலுக்கு உட்படுத்தாமல் அவர்கள் இந்தப் பரீடாசையில் பெற்ற பெறுபேறுகளுக்கு அமைய மாற்று வழியில் அவர்களுக்கான ஆறுதலைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறைகள் இருக்கும்போதும் கல்வி அமைச்சும் நடப்பு அரசாங்கமும் அவற்றைப் புறந்தள்ளிச் செயற்படுவது வருத்தப்படவேண்டிய விடயமாகும்.
மேலும் மாணவர்கள் நாட்டில் தொடரும் மிகவும் கடினமான சூழ்நிலையில் கொரோனா நோயின் ஆபத்தினை எதிர்கொண்டுதான் இந்த நிலைமையை வெளிக்காட்டியுள்ளார்கள். என்பதனை இந்த அரசாங்கத்துக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அது தொடர்பாக விரிவாக விவரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை.
எது எவ்வாறாயினும் நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக செயற்படுத்தப்பட்ட நிகழ்நிலை(online) கற்பித்தலின் ஊடாக யதார்த்தமற்ற நடைமுறைச் சாத்தியமற்ற செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்பதனை கல்வி அமைச்சும் அரசாங்கமும் இந்த நிலைமைகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடியும்.
எனவே இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் கல்விச் சவால்களுக்கு முகம்கொடுத்து மனோதிடத்தினைச் சீர்குலைக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளாமல், மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் புலமைப் பரிசில்களின் அளவை அதிகரித்து மேற்குறிப்பிட்ட அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு நீயாயத்தைப் பெற்றுக் கொடுக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பில் நாம் உங்களிடம் மிகவும் தேவைப்பாட்டோடு கேட்டுக் கொள்கிறோம்.” – என்றார்.