” எம்மை நோக்கி நீங்கள் ஒருவிரல் நீட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் உங்களை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதை மறக்கவேண்டாம். நல்லாட்சியின்போது ஏன் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
” மறைந்த எமது தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாதான் அவிசாவளை பகுதியில் முதன் முதலில் தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் அமரர் சந்திரசேகரன், எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் தனிவீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் எமது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மலையக பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எமது மக்களின் சார்பிலும், இதொ.காவின் சார்பிலும் நன்றிகளைத் தெரித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது எவ்வாறு சாத்தியம் என எதிரணி உறுப்பினர்கள் கேட்கின்றனர். அது பற்றி நிதி அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் முகாமைத்துவ உரித்து மீள்பரிசீலனை செய்யப்படும்.
அரச நிர்வாகத்தின்கீழ் உள்ள கம்பனிகள் ஆயிரம் ரூபாவை வழங்கலாம்தானே எனவும் எதிரணி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். அது பற்றி நாம் பெருந்தோட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். ஆனால் அவர்கள் நான்கரை வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போது அரச நிறுவனங்களால் ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாமல்போனது? எங்களை நோக்கி ஒருவிரலை நீங்கள் நீட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் உங்களை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதை மறக்கவேண்டாம்.” – என்றார்