மஸ்கெலியா – பெரிய சோலாங்கந்த தோட்டத்திலுள்ள துரை, தொழிலாளர்களை அடக்கி ஆள்வதற்கு முற்படுகின்றார் எனவும் , தொழில் ரீதியில் வன்முறைகளைப் பிரயோகிக்கின்றார் எனவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களால் பறிக்கப்படும் கொழுந்தைக்கூட அவர் நிராகரித்துவருவதாக கூறப்படுகின்றது. இன்றைய தினமும் (22.11.2020) அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழுந்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என துரை குறிப்பிட்டதையடுத்து அதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் பதற்றநிலை உருவானது.
வழமைபோல தொழிலாளர்கள் இன்றும் வேலைக்குசென்றுள்ளனர். கொழுந்து பறித்துக்கொண்டுவந்து அவற்றை ட்ரெக்டர் வண்டியில் ஏற்றும்போது,
” கொழுந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதனை ஏற்கமுடியாது.” என துரை குறிப்பிட்டுள்ளார். இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனையடுத்து தோட்ட துரைக்கும், தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் கொழுந்தை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், குறித்த துரையின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க தலைவர்களிடம் முறையிடப்படும் என தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்










