மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேற்கு கரைஜெனின் நகரத்தில் கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய இராணுவம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாலஸ்தீனர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு முதலுதவி செய்யாமல் இஸ்ரேலிய இராணுவம் ஜீப்பின் முன்பக்கம் கட்டி இழுத்து சென்றது.
இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இஸ்ரேல் இராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்தன.
இந்த நிலையில், தேடப்படும் சந்தேக நபர்களை பிடிக்க ஜெனினில் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போதுநடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் அந்த பாலஸ்தீனர் காயமடைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், போர் நடவடிக்கையின்போது நிலையான விதிமுறைகளை கடைபிடிக்க தவறிவிட்டது. காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பின் மேல் கட்டிவைத்து இழுத்துச் சென்ற சம்பவம் இஸ்ரேலிய இராணுவத்தின் விதிமீறலை எடுத்துக்காட்டுகிறது என பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,காயமடைந்த அந்த பாலஸ்தீனியரை மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து காயமடைந்த பாலஸ்தீன நபரின் குடும்பத்தினர்கூறுகையில் இஸ்ரேலிய இராணுவத்தின் கைது நடவடிக்கையின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டபோதும், ஜீப்பின் முன்புறத்தில் கட்டிக்கொண்டு அவரை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் ராணுவம் இழுத்துச் சென்றது என்று தெரிவித்தனர்.