உறுமய திட்டத்தை சீர்குலைக்க சில அதிகாரிகள் முயற்சி

உறுமய நிரந்தர காணி உறுதித் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அந்தத் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

தமக்குரிய காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 20,000 பேரில் 1768 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி அடையாளமாக காணி உறுதிகளை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இன்று உங்கள் அனைவருக்கும் முழுமையான காணி உறுதி கிடைக்கும். இதைப் பாதுகாத்து உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பது உங்கள் பொறுப்பு. இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​ஏன் இந்த காணி உரிமையை வழங்குகிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்பினர். வெள்ளையர்கள் நிலத்தை கையகப்படுத்திய அதே சட்டத்தைப் பயன்படுத்தி இந்த காணி உரிமைகளை மக்களுக்கு வழங்குகிறோம். இது உங்கள் உரித்தாகும். நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அந்த நடவடிக்கைகளுக்காக நிலஅளவைத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பணியாளர்களை அதிகரிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றிபெற அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்களை பயமுறுத்தும் அதிகாரிகள் குழு பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன. இந்தக் காணிகளை மீள அரசாங்கம் சுவீகரிக்க முடியும் அதனால் ஏன் இந்த காணி உறுதிப் பத்திரங்களை எடுக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பி வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், உங்களிடம் மீண்டும் ஒருமுறை அதிகாரி யாராவது கேள்வி கேட்டால், அந்த அதிகாரிகள் குறித்த தகவல்களை உங்கள் பிரதேச எம்.பி.க்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகளை விசாரித்து உண்மைகளை என்னிடம் தெரிவிக்குமாறு எம்.பி.க்களிடம் கோருகிறேன்.

இதுபோன்று செயற்பட்டு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சில அதிகாரிகளினால் தமது பணியை சிறப்பாக செய்யும் அதிகாரிகளுக்கும் அவப் பெயர் ஏற்படுகிறது. அதை அனுமதிக்க முடியாது.

அத்துடன், மாவட்ட செயலகங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் சென்று இந்தக் காணிகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து எமக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இதுகுறித்து ஆளுநர்களைத் தெளிவுபடுத்தியுள்ளேன். நீங்கள் அனைவரும் சேர்ந்து இந்த திட்டத்தை திறம்பட செய்ய முடியும். எனவே, அனைவரும் இத்திட்டத்தில் முழுமையாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த காணி உரிமைகளை வழங்குவது மட்டும் போதுமானதல்ல. காணி உரிமைகளைப் பெறும் விவசாயிகளின் வருமான வழிகளும் அதிகரிக்கப்பட வேண்டும். அதன் ஊடாக நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அந்த திட்டத்தின் மூலம் அனைத்து பயிர்களுக்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகிறன. அதன் மூலம் அடுத்த 05 ஆண்டுகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான ஆதரவைப் பெறுவார்கள்.

எனவே கட்சி பேதமின்றி எதிர்வரும் 02 மாதங்களில் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் அனைத்தையும் மக்களுக்கான வழங்க இங்குள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னின்று செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ:

”இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலேயே உறுமய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உங்களுக்கு காணி உறுதியை வழங்குவதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இருந்தது. டீ.எஸ்.சேனநாயக்கவின் காலத்தில் இகினியாகல வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, அம்பாறையில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர். விவசாயிகள் என்ற வகையில் உரிமை இல்லாத காணிகளில் பல வருடங்களாக விவசாயம் செய்தீர்கள், உங்களுக்கு உறுதிகளை வழங்கவே உறுமய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கு் உரிமை கிடைக்கும். முதல் முறையாக இவ்வாறான உறுதிகள் கிடைக்கிறது. அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உறுமய காணி உறுதிகள் உங்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகும்.

அரசியலில் சிலர் வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி உறுதிகளை பெற்றுத்தருகிறார். இரவு பகல் பாராமல் அரசாங்க அதிகாரிகள் அர்பணிக்கின்றனர். உறுதியை உங்களுக்கு வழங்குவதை சிலர் விரும்பவில்லை. அதனால் இனிவரும் காலங்களில் பரீசீலனைகளை செய்து பார்க்க நேரமில்லை. இதற்கு முன்பு பரீட்சித் பார்க்கச் சென்றதால் வந்த விளைவை அனைவரும் அறிவோம். நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே.” என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles