அதிபர், ஆசிரியர்கள் மீது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் அடிதடி நடத்தியமையை வன்மையாக கண்டிப்பதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நேற்று (26) கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
2021 ம் ஆண்டு 120 நாட்களுக்கு மேலான போராட்டத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளத்தில் வழங்கப்படுவதாக உறுதியளித்துள்ள மூன்றில் இரண்டு பங்கை உடனடியாக தமது சம்பளத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இணைக்கப்பட்ட அதிபர்,ஆசிரியர் பதவிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலவச கல்வியை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனகோரியே நேற்று அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இப்போராட்டம் அகிம்சை வழியில் நடைபெற்றது. போராட்டத்தின்போது பிரதான கோட்டே ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்து நிதியமைச்சின் காரியாலத்திற்கு செல்ல எத்தணித்தபோது மிலேச்சதனமாக பொலிஸாரும் இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர்.கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் அடிதடி நடத்திமையால் ஆசிரியர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அதில் ஆசிரியர் ஒருவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றுமொரு ஆசிரியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் எமக்கா இவ்வாறான நிலை? இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அப்போராட்டத்தின்போது நிதியமைச்சின் காரியாலயத்திற்கு ஆசிரியர் தொழிற்சங்களை அழைத்தபோது 10 பேர் கொண்ட குழுவில் ஆசிரியர் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்தது. அங்கு நாங்கள் சென்றபோது நிதியமைச்சரோ,கல்வி அமைச்சரோ, ஜனாதிபதியோ அல்லது அவற்றின் செயலாளர்களோ அங்கிருக்கவில்லை.
மாறாக எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு ஒரு கனிஸ்டநிலை அதிகாரி ஒருவரையே அனுப்பி வைத்திருந்தனர். அங்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். அங்கிருந்து போராட்ட களத்துக்கு சென்று பொலிஸாரின் நெருக்கடிக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.
இப்போராட்டத்தின்போது எம்மை தாக்கியவர்களுக்கு கண்டனத்தை வெளியிடுகின்றோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர்,ஆசிரியர்கள் இன்றைய தினமும் வெற்றிகரமாக சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
தலவாக்கலை பி.கேதீஸ்