மஸ்கெலியா பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்
மஸ்கெலியா பிரதேசம் அவதானம் மிக்க பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைத்தருவதை குறைத்துக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மஸ்கெலியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் மட்டும் புதிதாக ஏழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இக்குடும்பத்தில் ஒருவர் கொழும்பிலிருந்து வருகைத்தந்திருந்தார். அவருக்கு மேற்கொண்ட பி.சி. ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியான பின்னணியில் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஏனைய இருவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களாவர்.
மேலும் தீபாவளி பண்டிக்கை காலத்தில் கொழும்பு பகுதிகளிலுள்ளவர்கள் மஸ்கெலியா பிரதேசத்திற்கு வரவேண்டாம் என அறிவித்திருந்தேன். ஆனாலும் அதிகளவானோர் வருகைத்தந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுவரையில் மொத்தமாக 27 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனைதொடர்ந்து மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ சுகாதார பிரிவுகளில் வெளியிடங்களிலிருந்து வந்த அனைவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோல பரிசோதனை நடவடிக்கைளை மேற்கொள்ள தேவையான வசதிகள் காணப்படுவதானால் எங்களுடைய சேவையை முன்னெடுக்ககூடியாதாக உள்ளது. வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் முடியுமான வரை மஸ்கெலியா பிரதேசத்திற்கு வருவதை தவிர்க்குமாறு வைத்திய அதிகாரி சந்திரராஜன் வேண்டுகோள் விடுத்தார்
