கூலிக்காக மாத்திரம் போராடும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற வேண்டும்

தேர்தல் சீசனுக்கு மாத்திரம் சிறு தோட்ட உடைமை என போலித்தனமாக கூறிவிட்டு பின்னர் கூலிக்காக மாத்திரம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற்றப்படல் வேண்டும். மலையகத் தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர விடுதலைக்கான அரசியல் கோரிக்கை காணியை அடிப்படையாகக் கொண்டதாக அமைதல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஓருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளராக்கு” எனும் கோரிக்கையை வலியுறுத்திய மூன்றாவது கவனயீர்ப்புப் பேரணி ஹட்டன் – டிக்கோயா – அளுத்காலயில் அமைந்துள்ள் தொழிற்சங்கத் துறவி வி.கே. வெள்ளையன் நினைவுத்தூபி அருகே இடம்பெற்ற போது (2024/06/30) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் தம்மை இறைமை சார்ந்த கோரிக்கையை வலியுறுத்திய பல தியாகிகள், தலைவர்களை நினைவுபடுத்தியவாறே அவர்கள் எதற்காக தமது உயிரைத் தியாகம் செய்தார்களோ அதனை வலியுறுத்தும் வகையிலும், காணி உரிமைக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான புதிய அரசியல் கலாசாரத்தை மலையகத்தில் உருவாக்கும் கவனயீர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

முன்னதாக முல்லோயா கோவிந்தன், டெவன் சிவனு லட்சுமணன் நினைவிடங்களில் எமது கவனயீர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்த நிலையில் இன்று தொழிற்சங்கத் துறவி வி.கே.வெள்ளையன் நினைவுத் தூபி அருகே ஒன்றுகூடியுள்ளோம். 1960 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே முற்போக்கான அரசியல் கொள்கைகளை மலையக அரசியல் தளத்தில் முனவைத்தவர் வி.கே.வெள்ளையன்.

அவர் சார்ந்த அரசியல் அமைப்பு அவரது முற்போக்குச் சிந்தனைகளை ஏற்க மறுத்தபோது தனியான தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்று வித்தவர். மக்களுக்காக தனது தனிப்பட்ட வாழ்க்கையை அர்ப்பணித் தவர். தொழிற்சங்கத் துறவி என்ற போற்றப்படுபவர்.

துரதிஸ்ட்டவசமாக இப்போதெல்லாம் அவரது சிந்தனைகளை தேர்தல் விளம்பரமாக மாத்திரமே பயன்படுத்துகிறார்கள். தேர்தல் சீசனுக்கு மாத்திரம் சிறு தோட்ட உடைமை என போலித்தனமாக கூறிவிட்டு பின்னர் கூலிக்காக மாத்திரம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கலாசாரமே மலையகத்தில் நிலவுகிறது. இத்தகைய அரசியல் போக்கு மலையகத்தில் மாற்றப்படல் வேண்டும்.

கூலிக்கோரிக்கையையே மையப்படுத்திய கோரிக்கைகளை மாத்திரம் முன்வைக்காது தென்னிலங்கை சிங்கள மக்களைப் போல காணி உரிமையுடன் கூடிய சிறுதோட்ட உடைமையாளராதல் எனும் கோரிக்கையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தல் வேண்டும்.

மலையகத்தின் அடுத்த தலைமுறையாவது கூலிக்காக போராடுவதை விடுத்து காணிக்காகப் போராடும், தம்மை சுயாதீன விவசாயிகளாக மாற்றும் வகையில் தம்மை சிறுதோட்ட உடமையாளராக்கும் அரசியல் கலாசாரத்துக்கு மாறவேண்டும் . அந்த அடிப்படையிலே இளைஞர் யுவதிகளை அறிவூட்டும் வகையில் மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளராக்கு எனும் தொடர் கவனயீர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றோம் .

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது போல மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளர்களாக்கு எனும் கோரிக்கையை லலியுறுத்தும் நாடு தழுவிய கவனயீர்ப்பு இயக்கத்தை மலையக அரசியல் அரங்கம் – மலையக பாட்டாளிகள் அரங்கம் ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles