அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து பாலஸ்தீன மக்கள்மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் படுகொலைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் சஜித் வலியுறுத்தினார்.
“ ஒரு மனிதப் படுகொலை நிகழும்போது, அந்த மனிதப் கொலைக்கு காரணமான நாட்டையும் அரசையும் பற்றி வெளிப்படையாக பேச பயப்படக்கூடாது. இதை வெளிப்படையாக பேச சிலர் பயப்படுகிறார்கள்.
இருந்தாலும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், அவற்றைப் வழிநடத்தும் இஸ்ரேல் பிரதமர் குறித்தும் பெயர் சொல்லி பேசுவதற்கு சிலர் அஞ்சுகின்றனர். உண்மையைப் பேச தான் பயப்படவில்லை. இந்த 2 நாடுகளும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பு, ஒத்துழைப்புடன் போரின்றி இணைந்து வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது கொள்கை நிலைப்பாடாகும்.
எனவே, பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டத்தின் பிரகாரம், ஒரு நாடு உருவாகும்போது நிலம், மக்கள் மற்றும் அரசாங்கம் என்பன இருக்க வேண்டிய முக்கிய கூறுகளாகும். இந்தக் கூறுகள் இருந்தால், சுதந்திர நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்,
மக்களைக் கொன்று குவித்து, மக்கள் இல்லாத பாலஸ்தீன நிலத்தைப் பெறவே இஸ்ரேல் முயற்சிக்கிறது. இந்த கொடூரமான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்பதால் இதனை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.” – எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.