பிரிட்டன் பொதுத்தேர்தல்: லேபர் கட்சி முன்னிலை!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என தெரியவருகின்றது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை உள்ளது.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்த ரிஷி சுனக் ஜூலை 4 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த மே மாதம் அறிவித்தார்.

அதன்படி 650 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கான (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) தேர்தல் நேற்று நடந்தது. வாக்களிக்க தகுதி உடைய சுமார் 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மொத்தம் 650 மக்களவை தொகுதிகள் இருக்கும் நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி 202 இடங்களில் வென்றது.எனினும் போரிஸ் ஜான்சன் 3 ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர் கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரிட்டன் நேரப்படி நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாக தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு படு தோல்வியே கிடைக்கும் எனக் கூறின. வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அதையே காட்ட தொடங்கியிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

Related Articles

Latest Articles