மலையகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நாளை (13) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு செட்டியார் தெருவில் அமைந்துள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஏ. சிவஞானம் தலைமையில் மன்றத்தின் போஷகர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
கிழக்கு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பலாங்கொடை, வலேபொட தோட்டத்தைச் சேர்ந்த அருள் நேசன், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தமது கலாநிதி பட்டத்தை மேற்கொள்வதற்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அரசியல் விஞ்ஞான விரிவுரையாளராகக் கடமையாற்றும் அட்டன் பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் ஸ்ரீயாணி, தமிழ்நாடு கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்ளவும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றும் பலாங்கொடை மேற்பிரிவைச் சேர்ந்த சந்திரகுமார் தர்ஷினி, நோர்வே நாட்டின் பேர்ஜின் பல்கலைக்கழகத்தில் தமது முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் மேற்படி நிதியுதவி வழங்கப்படுகின்றது.










