மலையகத்தினை கிராமமாக மாற்றும் வேலை திட்டம் காலத்திற்க்கு ஏற்ற சரியான தீர்மானமாகும் – என்று நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 200 வருட வரலாற்றை கொண்ட 11 மாவட்டங்களில் பரவலாக காணப்படும் மலையக மக்களின் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மலையகத்தினை கிராமமாக மாற்றும் வேலை திட்டம் காலத்திற்க்கு ஏற்ற சரியான தீர்மானமாகும்.
பெருந்தோட்டங்களை பொருத்தமட்டில் குடியிருப்புகளை விஸ்தரிப்பதற்கும், நீர் மற்றும் மின்சார இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் தோட்ட முகாமையிடம் அனுமதி பெற வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறு பெருந்தோட்டங்கள் கம்பனிகளின் கைப்பிடிக்குள் மட்டும் சிக்கித் தவித்தது போதும்.
இந்த திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி உள்ளது. ஆகவே எதிர்க்கட்சி ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் உடன் இணைத்து கொண்டு உபக்குழு ஒன்றை அமைத்து நிறை குறைகளை ஆராய்ந்து உடனடியாக இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் 22ஆம் திகதி இக்குழு அதனுடைய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஜனாதிபதியின் அமைச்சரவை தீர்மானத்திற்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றார்.










