தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு, இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை அவர்களுக்கு இடைக்கால தொகையாக 5000 வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை மனோ கணேசன் வரவேற்றிருந்தார்.
மனோகணேசன், சம்பள பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடாமல் கருத்து தெரிவித்தது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும் என செந்தில் தொண்டமான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, இடைக்கால கொடுப்பனவு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன என்பதை இரு கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகள் வெளிப்படுத்தியுள்ளன.