“ ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தலைமைகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்திருக்கின்றனர். இவ்விடயத்தில் தென் இலங்கை தமிழ் கட்சிகளின் தலைமைகள் மூக்கை நுழைத்து அவர்களின் நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க கூடாது.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ மலையக தலைமைகள் வடகிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எப்பொழுதும் எதிராக செயற்படக்கூடாது.
வடக்கு,கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை மனிதாபிமான மற்றும் தமிழர்கள் என்ற முறையில் நாம் ஆதரித்து வந்திருக்கிறோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் இவ்விடத்தில் சரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.
எனினும் சில தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு மக்களின் இரண்டாவது வாக்கை தாம் ஆதரிக்கப்போகின்ற வேட்பாளருக்கு வழங்குமாறு கோரப்போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
இது தேவையற்ற வெறுமனே மூக்கை நுழைக்கும் விடயமாகும். வடகிழக்கு மக்களின் கோரிக்கைக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு உபத்திரியம் கொடுப்பதாக இருக்கக் கூடாது.
வடகிழக்கு மக்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்கை யாருக்கு வழங்குவது என்பதை அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளிடமே விட்டுவிட வேண்டும். அதே நேரத்தில் வட கிழக்கு மலையக மக்களுக்கு இலங்கையர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது.
கடந்த காலங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை அலங்கரித்த தலைவர்கள் சிறுபான்மை மக்களின் விடயங்களை கையாள்வதில் ஒரு திருப்திகரமான போக்கை கடைபிடிக்கவில்லை என்பது ரகசியமான விடயம் அல்ல.
இந்த நிலையில் வடகிழக்கு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாங்களுக்கு பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுப்பதில் எவ்வித தவறும் இருக்க முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.
தென்னிலங்கை மற்றும் மலையக தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களோடு ஒன்றாக கலந்து வாழ்பவர்கள். அதே நேரத்தில் உரிமை கோரிக்கையுடன் அபிவிருத்தி எதிர்பார்ப்புடனும், இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை பேணும் வகையிலும் மலையக மக்களும் நாமும் எமது அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டி இருக்கிறது .
அந்த வகையில் வடகிழக்கு மக்களின் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் பொறுப்பை வடகிழக்கு கட்சிகளிடம் விட்டுவிட்டு தென்னிலங்கை மற்றும் மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஏற்ப மலையகக் கட்சிகள் செயற்படுவதே காலத்துக்கு பொருத்தமாகும எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.