இலங்கை சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருக்கின்றபோதிலும் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக இதுவரை (இன்று காலை) எந்தவொரு பெண் வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
பிரதான அரசியல் கட்களில் இருந்து ஆண் வேட்பாளர்களே ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி – கூட்டணி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அநுரகுமாரை திஸாநாயக்கவை களமிறங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஆகிய இருவரில் ஒருவரை களமிறக்கவுள்ளது.
35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிட்ட 2019 ஜனாதிபதி தேர்தலின்போதுகூட ஒரேயொரு பெண் வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டார். (அஜந்தா பெரேரா)
இலங்கையில் 1982 இல் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. சுதந்திரக்கட்சி தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் அத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. எனினும், 1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார். பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவராக விளங்கினார்.
1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் பிரதான இரு வேட்பாளர்களாக பெண்களே திகழ்ந்தனர். சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் சந்திரிக்கா அம்மையாரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஸ்ரீமா திஸாநாயக்க (காமினி திஸாநாயக்கவின் மனைவி) ஆகியோர் போட்டியிட்டனர்.
காமினி திஸாநாயக்கவே தேர்தலில் போட்டியிட்டால், அவர் கொலை செய்யப்பட்ட பிறகு அவரின் மனைவி களமிறக்கப்பட்டார்.1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் களமிறங்கினார்.
எனினும், அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்களாக பெண்கள் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை இதுவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு பெண் வேட்பாளரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விடுக்கவில்லை. எனினும், கட்டுப்பண தாக்கலுக்கு ஆகஸ்ட் 14 ஆம் திகதிவரை கால அவகாசம் உள்ளதால் பெண் வேட்பாளர் ஒருவரேனும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆர்.சனத்