‘இரட்டைப்பாதையில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு’

உடப்பலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட புஸல்லாவை – வகுகப்பிட்டிய, இரட்டைப்பாதை பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது. கூட்டமாக வருகின்ற குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களையும் ஏனைய கைக்கெட்டிய பொருட்களையும் எடுத்துச் செல்கின்றன.

கடைகளுக்குள் சமயம் பார்த்து பிரவேசிக்கும் குரங்குகள் பழங்கள் மற்றும் பக்கற்றுக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், பிஸ்கட்பக்கட்டுக்கள், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தூக்கிச் செல்கின்றன.

அத்துடன் குரங்குக் கூட்டங்கள் கூரைகளில் ஏறி தாவிக் குதித்துத் திரிவதால் கூரைகள் சேதமடைந்து விடுகின்றன. வீட்டின் கூரையில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர்த் தாங்கிகளில் நீரைக் குடிப்பதற்காக அதன் மூடியை உடைத்துத் திறக்கின்றன .

குடிநீர்த் தாங்கிகளில் உள்ளிறங்கி நீராடுகின்றன. வாழை, தென்னை, டூரியன், கொய்யா, பப்பாசி உள்ளிட்ட பழவகைகளை தின்றும் அழித்தும் வருகின்றன. மரக்கறி வகைகளை சேதம் செய்து விடுகின்றன.

மக்களுக்கு பாதையில் பயணிப்பதற்கு கூட அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் மற்றும் வளவுக்குள் நுழைகின்ற குரங்குகளை விரட்டும் போது அவை மனிதருக்கு கடிக்க வருகின்றன. வீட்டுக்காரரையே அவை துரத்துகின்றன.

ஆடைகளை கழுவி உலர்த்துவதற்கு முடியாது உள்ளது. ஆடைகளை கிழித்து விளையாடி நாசம் செய்கின்றன. இவை தனியே வருவது இல்லை. கூட்டம் கூட்டமாகவே வருகின்றன.

தொலைபேசி கம்பிகளில் தொங்கி விளையாடி அக்கம்பிகளை அறுத்து விடுகின்றன. குரங்கு கூட்டதால் இப்பகுதியில் விவசாயச் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர். நவராஜா தெல்தோட்டை தினகரன் நிருபர்

நன்றி – தினகரன்

Related Articles

Latest Articles