ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாது எனவும், சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் அக்கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் முடிவெடுத்திருந்தது. ஆனால் ஐ.தே.க. உறுப்பினரான முன்னாள் எம்.பி. கே.கே. பியதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
🛑 ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக நேற்றுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி இருந்தாலும், நாட்டின் சனத்தொகையில் பெண்களே அதிகம் என்றபோதிலும் பெண்வேட்பாளர் எவரும் இம்முறை போட்டியிடவில்லை. (நேற்றுவரை கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை)
இந்நாட்டில் இரு பெண்கள் அரச தலைவர்களாக இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல நாளை (14) நண்பகல் 12மணிவரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு அவகாசம் உள்ளது.
🛑 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று தமிழர்கள் நேற்றுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
1. கே. ஆர். கிறிஷான் (அருணலு மக்கள் முன்னணி)
2. திலகராஜா (சுயேட்சை)
3. பா.அரியநேத்திரன் (சுயேட்சை)
🛑 இரு பிக்குகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
1.பத்தரமுல்லே சீலரத்ன தேரர் (ஜனசெத பெரமுண)
2.அக்மீமன தயாரத்ன தேரர் (சுயேட்சை)
🛑 இரு முஸ்லிம் வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
1.மொஹமட் இல்யாஸ் (சுயேட்சை)
2.மொஹமட் இன்பாஸ் (ஜனநாயக ஐக்கிய முன்னணி)
🛑 ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஐந்தாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
🛑 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு 2ஆம் இடத்தை பிடித்த ரணில் விக்கிரமசிங்க 19 வருடங்களுக்கு பிறகு இம்முறை மீண்டும் களமிறங்கியுள்ளார். இரு தடவைகள் யானை சின்னத்தில் போட்டியிட்ட அவர், இம்முறை சுயாதீன வேட்பாளராக வருகின்றார்.
🛑 முன்னாள் ஜனாதிபதிகளின் இரு மகன்மார் போட்டியிடுகின்றனர். (சஜித், நாமல்)
🛑 1982 இல் இலங்கையில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மண்ணிலிருந்து ஜீ.ஜீ. பொன்னம்பலம் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார். ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று அவர் நான்காம் இடத்தை பிடித்தார். அத்தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் மாத்திரமே போட்டியிட்டனர். இவர்களில் வாசுதேவ நாணயக்கார மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். 82 இற்கு பிறகு இம்முறையே வடக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் – தென்னிலங்கையிலும் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
சரி ஒரு நகைச்சுவையையும் கடைசியாக கூறிவைப்போம்.
( கடந்த சில நாட்களாக சமூகவளைத்தங்களில் பட்டம் பற்றி அதிகம் பேசப்பட்டது, இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவால் பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுள், பட்டம் சின்னத்தை கொண்ட கட்சியொன்றும் உள்ளது.
அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் எவரும் போட்டியவில்லைபோல்தான் தெரிகிறது. சிலவேளை பட்டம் ஹிட்டாகியுள்ளதால், நாளைகூட கட்டுப்பணம் செலுத்தலாம் அல்லவா)
ஆர்.சனத்