மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் , ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு ,
கடந்த ஜந்து வருடங்களாக நாங்கள் எதிர்கட்சியில் அங்கம் வகித்துவருகிறோம். மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியினை சார்ந்த அமைச்சர்கள் மாடிவீட்டுத்திட்டம் மற்றும் பத்து பேர்ச் கானி என்பவற்றை பெற்றுதருவதாக கூறினார்கள். மலையகத்திற்கான பல்கலைகழகம் அமைப்பதாக கூறினார்கள். ஆனால் எந்த அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் எமது நல்லாட்சி அரசாங்கத்தில் தனிவீட்டு திட்டம் முதல் காணி உரிமை , பிரதேசசபை அதிகரிப்பு பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்வாங்கப்படுவதே எமது திட்டமாக அமைந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெருவார் . சஜித்பிரேமதாச வெற்றி பெற்றவுடன் நான் அமைச்சாராக மக்கள் மத்தியில் வந்து விட்டு சென்ற அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பேன் எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.