சிறுதோட்ட உரிமையாளர் என்பது பொய்! ராதா பகீர் தகவல்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட
உரிமையாளர்களாக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவது பொய்யாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரச கொள்கையை அறிமுகப்படுத்தி அமுல்படுத்துதல்.” – என்ற உறுதிமொழி ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (தமிழ் மொழி ஆவணம்) கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு ஏக்கர் காணியை பிரித்துக்கொடுப்பதற்கு சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிங்கள அரசியல் வாதிகளும் உடன்படமாட்டார்கள்.
எனவே, அது குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும். அதாவது 25 அல்லது 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படும். குத்தகை கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும். பராமரிப்பு வேலைகளை தோட்டத் தொழிலாளர்கள் செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை அவர்கள் வைத்துக்கொள்ளலாம்.

எனவே, வீட்டை பிரித்து தருகின்றோம், காணியை பிரித்து தருகின்றோம் என எவரும் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொன்னால் அது பொய்.” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் விவரித்துள்ளார்.
இதன்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன்,

“தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருக்கலாம், பிரதித் தலைவராக இருக்கலாம், இவர்கள் கூட கூறுவது இதுதானே (சிறுதோட்ட உரிமையாளர்” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், “ சிறுதோட்ட உடமையாளர்” – எனக் குறிப்பிட்டு சமாளிக்க முற்பட்டார்.

சிறுதோட்ட உடமையாளர், உரிமையாளர் இரண்டும் ஒன்றுதான் என ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன்,

“ உரிமையாளர்கள் என்றில்லை, குத்தகைக்கு வழங்கப்படும் காணியை அவர்கள் பராமரிக்க முடியும்.” – என்றார்.

“ அப்படியானால் உரிமையாளர் என்பது நீங்கள் குறிப்பிடுவதுபோல்பொய்தான்..” என ஊடகவியலாளர் கேட்டார்.

“உரிமையாளர் என சொல்ல முடியாது. அந்த வார்த்தை பிரயோகம் என்பது பிழை.” என இராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
“ உங்கள் கருத்தின் பிரகாரம் மனோ கணேசன், திகாம்பரம்கூட சொல்வது பொய்தானே…” என சிரேஷ்ட ஊடகவியலாளர் வினா தொடுத்தார்.

இதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன்,
“பொய்யானது என நான் கூறமாட்டேன். சிறுதோட்ட குத்தகைக்காரர்கள் எனக் குறிப்பிடலாம்.” – என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles