சிறுதோட்ட உடமையாளர் விவகாரம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா.
ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையிலேயே சக ஜனாதிபதி வேட்பாளருக்கு இந்த சவாலை விடுக்கின்றேன் எனவும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அவர் குறிப்பிட்டார்.
“சிறுதோட்ட உடமை என்ற எண்ணக்கருவை சஜித் பிரேமதாசவுக்கு சொல்லிக்கொடுத்ததே நான்தான்.
2019 ஜனாதிபதி தேர்தலின்போது கொத்மலை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என சஜித் உறுதியளித்தார்.
பின்னர் ஹட்டனியில் நடைபெற்ற கூட்டத்தின்போது இது பற்றி அவரிடம் வினவினேன். நடைமுறைச் சிக்கல்களை சுட்டிக்காட்டினேன். பிறகுதான் ஆயிரத்து 500 ரூபா வருமானம் பெறுவதற்கு வழிவகுக்கும் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை அவர் விடுத்தார். அதற்குரிய வழிகாட்டலை நானே வழங்கி இருந்தேன்.
தற்போதும் அதே நிலையில்தான் சஜித் இருக்கின்றார். அடுத்தக்கட்டம் நோக்கி அவர் செல்லவில்லை. கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் சிறு மாற்றங்களுடன் வந்துள்ளன.
தென்பகுதி மக்கள் எவ்வாறு சிறுதோட்ட உடமையாளர்களாக இருக்கின்றார்களோ அதுபோல எமது தொழிலாளர்களை மாற்ற வேண்டும். மாறாக முதலாளிகளாக்கப்போகின்றோம் எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் தவறான விம்பத்தை ஏற்படுத்தக்கூடாது. தனது தேர்தல் விஞ்ஞாபனம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.” – எனவும் திலகராஜா குறிப்பிட்டார்.










