மீண்டும் வரிசை யுகம் ஏற்படின் சஜித், அநுரதான் பொறுப்பு கூற வேண்டும்!

“ நாடு மீண்டும் பொருளாதார படுகுழியில் விழுந்தால் அதற்கு சஜித் தான் பொறுப்பு” – என்றுபுதிய ஜனசெத பெரமுனவின் தலைவர் காமினி விஜேநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்தபோது, மக்களின் துயரங்களை உணர்ந்த தலைவர் ஒருவர் இருக்கவில்லை. அப்போது, நாட்டை மீட்கும் பொறுப்பை மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார். அந்தப் பொறுப்பை அவர் சரியாக நிறைவேற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.

தற்போது சஜித் பிரேமதாசவின் நடத்தை அவர் தனது தந்தைக்கு எதிராகவும் செயற்படுவதையே காட்டுகிறது. அன்று ஆர். பிரேமதாசவின் கட்சியின் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அப்போது ரணசிங்க பிரேமதாசவுக்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை, ஆனால் அவர் தலைவரையும் கட்சியையும் பாதுகாக்க பாடுபட்டார்.

ஆனால் இன்று சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவ்வாறான நடத்தையை நாம் காணவில்லை. அதிகார பேராசை கொண்ட அவர், விரைவில் ஜனாதிபதியாக வர முயற்சிக்கிறார். அதன்மூலம் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாடு வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. அன்று கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றார். அந்த ஆணையுடன் நாடு வீழ்ந்த அதே இடத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு சஜித் முற்படுகிறார். அந்த துரதிஷ்டமான இடத்திற்கு இந்த நாட்டை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

துன்புறும் மக்களை மீண்டும் கஷ்டத்தில் தள்ள வேண்டாம் என்று சஜித்திடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அனுரகுமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி. செய்த அழிவை நாம் அறிவோம். சஜித் மற்றும் அனுர இருவரும் இணைந்து இந்த நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். சஜித் பிரேமதாசவினால் ஒருபோதும் அனுரகுமாரை தோற்கடிக்க முடியாது. இருவரும் அந்த இருவருக்கும் மறைமுகமாக உதவி செய்கிறார்கள். நாம் அதை பார்க்கிறோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles