தபால் மூல வாக்களிச்சென்ற ஆசிரியர்களுக்கு பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்த அதிபர்

தபால் மூல வாக்களிப்புகளுக்காகச் சென்ற தனது கல்லூரி ஆசிரியர்கள் சிலருக்கு அவர்களது பாடப்பதிவு புத்தகத்தில் சிவப்பு கோடடித்தது மாத்திரமல்லாது பாடவேளையில் ஆசிரியர் வகுப்பில் இல்லை என அதிபர் ஒருவர் எழுதிய சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்தின் முறைப்பாட்டுப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு அது தொடர்பான சுற்று நிருபம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தாபன விதி கோவை அத்தியாயம் 12 இன் படி ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கச்செல்வோருக்கு நான்கு மணித்தியாலயங்கள் விடுமுறை வழங்கப்படல் வேண்டும்.

இந்நிலையில் அஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் பலர் இன்றைய தினம் அதிபரிடம் வாக்களிக்கச்செல்வதாக அறிவித்து விட்டு பாடசாலைக்கு திரும்பிய வேளை அவர்களது பாட பதிவு புத்தகங்களில் ஆசிரியர் வகுப்பில் இல்லை என அதிபர் சிவப்பு மையினால் எழுதி கோடடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவதே முக்கியம் என்றும் அதிபர் கூறியுள்ளதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனநாயக ரீதியாக இடம்பெறும் தேர்தல் ஒன்றில் தமது வாக்களிக்கும் உரிமையை அதிபர் மீறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்தின் முறைப்பாட்டுப்பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரி பண்டாரவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles