வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை கொண்டு வருவதற்கு வேறெந்த தலைவரும் செய்யாத விடயத்தை நாம் செய்வோம். தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு வடகிழக்கு மக்களை மையப்படுத்தியதாக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை பாரிய அபிவிருத்தியின் பால் இட்டு செல்வோம். இதன் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த தற்போதைய பதில் ஜனாதிபதி வடகிழக்கு மக்களை சந்திக்க சென்றார். அவரினால் வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டைக் கூட்ட முடியுமாக இருந்தாலும், அதற்கான இயலுமை அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த மாநாட்டை கூட்டவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த இயலுமை இருக்கின்றது. எனவே அதிகாரத்திற்கு வந்த உடனே சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் எனவும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 57 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
“ சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அனைத்து பாடசாலைகளையும் மாற்றி தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம், மற்றும் ஆங்கில மொழிக் கல்வி என்பனவற்றை பயில்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, புதிய கல்வி முறை ஒன்றின் ஊடாக சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக அனைத்து வைத்தியசாலைகளையும் மாற்றி உயர்தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்.” – எனவும் குறிப்பிட்டார்.
