லெபனானில் தொடர் வெடிப்பு: 9 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் காயம்!

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து பேஜர்களை ஒருங்கிணைத்து வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதாவது, ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களது தொடர்புடையவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

காசாவில் நடைபெற்று வரும் போர் காரணமாக, தொழில்நுட்பத்தில் இஸ்ரேலின் மீறல்களைத் தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பலர் வைத்திருந்த கையடக்க பேஜர்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து பேஜர்களைப் பயன்படுத்தும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் வைத்திருந்த பேஜர்களும் தொடர்ச்சியாக வெடித்தன.

லெபனானில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் வெடிப்புகள் நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.

அதேபோல், தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் அவர்கள் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. மேலும், லெபனானுக்கு வெளியேயும் பேஜர்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 9பேர் உயிரிழந்திருப்பதாகவும், 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், அதில் பலர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்திவரும் நிலையில், இச்சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளது.
சைபர் தாக்குதலால் லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைந்ததால் பேஜர் வெடிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இதுகுறித்து ஹிஸ்புல்லாவில் உள்ள தொடர்புடைய அதிகாரிகள், விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles