தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வசித்து வருகின்றன.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நமீபியா, மலாவி, சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காலநிலை மாற்றமான எல் நினோவால் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பொதுமக்களுக்குப் பயன்படுத்தும் வகையில் 83 யானைகள் உள்ளிட்ட 723 காட்டு விலங்குகளை கொல்லும் திட்டம் மிகவும் தற்போது அவசியம் என்று ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமீபியா சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வறச்சி என்பது எப்போதும் நிலவும் ஒரு விஷயமாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் அதாவது 2018 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல, தென் ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின்கீழ் ஆய்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சுமார் 30 லட்சம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நமீயாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக யானைகள் தவிர 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள், 100 எலாண்ட்ஸ் மான் வகை ஆகியவற்றைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், நமீபியாவைத் தொடர்ந்து கடும் வறட்சி காரணமாக வன விலங்குகளின் இறைச்சியை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஜிம்பாப்வேயும் திட்டமிட்டுள்ளது.
ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினோஷே ஃபராவோ கூறுகையில், உணவுக்காக தேவைப்படுபவர்கள் யானைகளை வேட்டையாடி கொள்ளலாம் என்றும், அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு தரப்பிலும் மக்களுக்கு விலங்குகளின் இறைச்சி வழங்கப்படும்.
இத்திட்டத்தை மனித விலங்கு மோதல் அதிகம் ஏற்படும் ஆப்பிரிக்க நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளில் செயல்படுத்த திட்டம் உள்ளது. அதிகரிக்கும் வெப்பம், நீர், உணவு தட்டுப்பாடு காரணமாக விலங்குகளை வேட்டையாடுவதற்கான அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகள் வாழ்வதற்கான போதுமான இடமும் இல்லை. ஹ்வாங்கே பகுதியில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் 15 ஆயிரம் யானைகள் மட்டுமே வசிப்பதற்கான வனப் பரப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.