ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் கா. காந்தீபன் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 42061 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். பதுளை மாவட்டத்தில் உள்ள 567 கிராம சேவையாளர் பிரிவுகளில் 523 தேர்தல் பிரிவுகள் காணப்படுகின்றன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 530 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் உட்பட ஏனைய ஆவணங்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக பதுளை மத்திய மகா வித்தியாலயம் செயற்படவுள்ளது.
நாளை 20ஆம் திகதி காலை 6.30 மணி தொடக்கம் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
வாக்கெண்ணும் நிலையங்களாக பதுளை மத்திய மகா வித்தியாலயம், பதுளை விசாகா வித்தியாலயம் என்பன செயற்படவுள்ளன.
பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் 55 வாக்கெண்ணும் நிலையங்களும், விசாகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் 29 வாக்கெண்ணும் நிலையங்களும் இப்பணிக்காக தாபிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இம்முறை பதுளை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உத்தியோகப்பூர்வ தேர்தல் முடிவுகள் பதுளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இருந்து அறிவிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி தேர்தலின் தெரிவத்தாட்சி அதிகாரியாக மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ பிரபாத் அபேவர்தனவும், உதவி தெரிவத்தாட்சி அதிகாரியாக உதவி தேர்தல் ஆணையாளர் கா. காந்தீபனும் செயற்படுவதாக மேலும் தெரிவித்தார்.
பசறை நிருபர்