அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்: பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

“ எமது ஆட்சியில் பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது. அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியவும் கூடாது. நாம் தவறிழைத்தால்கூட சட்டத்தை கம்பீரமாக செயற்படுத்துங்கள்.” – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.

கடவுச்சீட்டு பிரச்சினை பிரதான பிரச்சினையாக உள்ளது, அதனை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். இது தொடர்பில் பணிப்பாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தற்போது உள்ள கடவுச்சீட்டு வரிசை முடிவுக்கு கொண்டுவர புதியக் கடவுச்சீட்டை வழங்கக்கூடியதாக இருக்கும் என கூறியுள்ளார். தற்போதுள்ள வரிசையை கட்டுப்படுத்துவதற்குரிய மாற்று யோசனைகளை முன்வைக்குமாறும் நாம் கோரியுள்ளோம்.

அதேவேளை கடந்த காலங்களில் பொலிஸார்மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்போனது. அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்குரிய பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் எனக்கும், செயலாளருக்கும், பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் உள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் இதனை செய்ய முடியும் என நம்பவில்லை. ஆனால் விரைவில் செய்து முடிக்க வேண்டும்.

எவ்வித அரசியல் தலையீடும் இன்றி பொலிஸாரின் சேவையை முன்னெடுக்க இடமளிக்கப்படும். இதுவரைகாலமும் தவறான நடைமுறை இருந்திருந்தால் அதனை மாற்றிக்கொள்வதற்குரிய சுதந்திரத்தை நாம் வழங்குவோம். அரசியல் கட்டளைகளுக்கு அடிபணியாமல், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் செயற்பட வேண்டும்.

எமது ஆட்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் என்பன இனி அரசியல் ரீதியில் வழங்கப்படவும் மாட்டாது.

பழைய நடைமுறையை, கலாசாரத்தை மறந்து, புதிய கலாசாரத்தை உருவாக்குவோம். யார் தவறிழைத்தாலும், எமது தரப்பினர் தவறிழைத்தாலும் தவறு தவறுதான். சட்டம் உரிய வகையில் செயற்படவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles