” பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துகொடுப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (2) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் யுகத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர்களுக்கு 7 பேர்ச்சஸ் வீதம் காணி வழங்கி தனி வீடு அமைக்கும் திட்டம் எமது ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.
எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்றனர். ஆனால் இன்னும் அது வழங்கப்படவில்லை. எனவே, குறித்த திட்டம் எப்போது ஆரம்பமாகும், எப்போது நிறைவடையும் என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.
கடந்த எந்தவொரு ஆட்சியின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக காணி உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நல்லாட்சியின்போதுதான் லக்ஷ்மன் கிரியல்ல பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கையில அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு சட்டபூர்வமாக அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்திட்டம் தொடருமா” – என்றார்.










