” மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிச்சயம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். 7 பேர்ச்சஸ் வீடமைப்பதற்கும் மூன்று பேர்ச்சஸ் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்தலாம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,
” எனது அமைச்சுக்கு போதுமாளனவு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்தனர். ஆனால் வீட்டுத்திட்டம் உட்பட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின்போது காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் அது சட்டப்பூர்வமானது அல்ல. வங்கியில் வைத்து கடன் வாங்கலாமாம். அது எந்த வங்கியில் எனக் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
மலையக மக்கள் தொடர்பில் விஜித ஹேரத் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். வரவேற்கின்றோம். ஆனால் அவரது கட்சிதான் மலையக மக்களை ஒருகாலகட்டத்தில் கொடுமைப்படுத்தியது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
மலையகத்துக்கு பல்கலைக்கழகம் வரும். தோட்டத்தொழிலாளர்களுக்கு நிச்சயம் சம்பளம் கிடைக்கும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.










